செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் எடை மேடை நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த விஜயகுமார் (வயது 26) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் விஜயகுமாரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மாமூல் கொடுக்க மறுத்த விஜயகுமாரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் சென்னை சிறையில் உள்ள ரவுடி மாமூல் கேட்டதாகவும் அந்த நபரின் பெயரை பயன்படுத்தி மாமூல் வசூல் செய்வது இவர்களின் வாடிக்கை என்பதும் தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வெட்டிய 3 பேரை தேடி வருகின்றனர்.