செய்திகள்

தமிழர் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சித்தால் மாபெரும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழர்களின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சித்தால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம் என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோவில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து - பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் தொல்லியல் துறைஒன்று செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை எடுக்க முயன்று - அதற்கு கலைஞர் அவர்களும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக - அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலைக் கூட கைப்பற்ற முயன்று - அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது. இதுபோன்ற சூழலில், பா.ஜ.க.வின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும் - தமிழைப் புறக்கணித்து - இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோவில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் தாலாட்டு பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து - இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது.

மத்திய மந்திரியின் அறிவிப்பு அடாவடியானது; மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோவில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து - வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும்.

திருக்கோவில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க. மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அ.தி.மு.க. அரசும் - தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக தாராளமாக தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு, இப்போது திரைமறைவில் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகமே எழுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன என்று மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது - தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோவில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு - தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம். திருக்கோவில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜ.க. எம்.பி மூலம் மக்களவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர வைத்த பரம்பரை எதிரிகள் தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோவில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள். தமிழர்களின் நாகரிகம் - பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒரு போதும் அனுமதிக்காது.

ஆகவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை மந்திரி முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி - மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை - கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் - அதை எதிர்த்து திமுக சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது