அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து சிமெண்டு ஆலைகளின் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்துகள் பற்றி காணொலி காட்சி கொண்டு விளக்கப் படம் மூலம் காட்டபட்டது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசுகையில், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து சிமெண்டு ஆலைகளுக்கு அளவுக்கு அதிகமாக சுண்ணாம்புக் கற்களை லாரியில் ஏற்றிச் செல்லக்கூடாது. அவ்வாறு ஏற்றி செல்லும் லாரியின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமின்றி, அந்த சிமெண்டு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எச்சரிக்கை பலகைகள்
டிரைவர்கள் சீருடை அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். சிமெண்டு தொழிற்சாலைகளில் உள்ள கனரக வாகனங்களை 55 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே இயக்க வேண்டும். பஸ்களில் படியில் நின்று பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப் படும். ஜெயங்கொண்டம் மீன் மார்க்கெட்டில் இரு சக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூரில் இருந்து வி.கைகாட்டி செல்லும் சாலையோரத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும். வி.கைகாட்டி ரவுண்டானா, கலெக்டர் அலுவலக ரவுண்டானா, செந்துறை ரவுண்டானா, அண்ணாசிலை ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சிக்னல்களை பயன்படுத்தி போக்குவரத்தை போலீசார் சரி செய்ய வேண்டும். விபத்துகள் ஏற்படாமல் இருக்க போலீசார் சார்பிலும், சிமெண்டு ஆலை சார்பிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.