பெங்களூரு,
ராமநகர் மாவட்டத்தின் பெயரை, நவ பெங்களூரு என மாற்றம் செய்ய இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அருகிலேயே காவிரி ஆறு ஓடுகிறது. இக்களூரில் தேவேகவுடா அணைக்கட்டு இருக்கிறது. மாகடிக்கு ஹேமே நதி நீர் வரவுள்ளது. தங்கத்திற்கு இணையான நிலம் உள்ளது. திறந்த மனதுடன் கூடிய மக்கள் உள்ளனர். பெங்களூருவுக்கு அருகிலேயே உள்ள இந்த விலை மதிப்புமிக்க இந்த நிலத்தை பறித்து, தொழில் நிறுவனங்களுக்கு வழங்க அரசு முயற்சி சய்கிறது. இந்த அரசுக்கு என் மீது அரசியல் வேறுபாடும் இருக்கிறது.
ராமநகரை வளர்ச்சி அடைய செய்யும் எண்ணம் உங்களுக்கு (எடியூரப்பா) உள்ளதா?. அத்தகைய எண்ணம் இருந்தால், இந்த மாவட்டத்திற்கு நான் ஒதுக்கிய நிதியை முழுமையாக விடுத்தாலே போதும். அதையும் தாண்டி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உங்களுக்கு நானும், அந்த மாவட்ட மக்களும் ஒத்துழப்பு வழங்க தயாராக இருக்கிறோம்.
பெங்களூரு நகரை கெம்பேகவுடா அமைத்தபோது, இந்த பகுதி மேலும் விரிவடையக்கூடாது என்று கருதி நகரின் நான்கு திசைகளிலும் கோபுரத்தை கட்டினார். ஆனால் அந்த எல்லையை எப்போதோ மீறி நகரம் வளர்ந்து விரிவடைந்துவிட்டது. கெம்பேகவுடாவின் விருப்பத்தை மீறினோம். ஏரி, கால்வாயை மூடிவிட்டோம். அதன் விளைவாக பெங்களூருவில் இன்று பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
வளர்ச்சி என்ற பெயரில் இத்தகைய பிரச்சினைகளை ராமநகரிலும் ஏற்படுத்துவது சரியல்ல. நிலத்தை கொள்ளையடிக்காமல் இருக்க வேண்டும். ஏரிகளையும் மூடாமல் இருக்க வேண்டும். நம்முடைய மக்கள் நலன் சார்ந்த கலாசாரம் அழியாமல் இருக்க வேண்டும். பெங்களூரு என்ற சொல்லில் என்ன உள்ளது. பெங்களூரு என்று சொல்லிவிட்டாலே வளர்ச்சி ஏற்பட்டுவிடுமா?. அப்படி என்றால் மற்ற மாவட்டங்களுக்கும் பெங்களூரு என்ற பெயரை சூட்டிவிடலாம் அல்லவா?. அது உங்களுக்கு சாத்தியமா?.
ராமநகருக்கு பெங்களூரு என்று பெயர் சூட்ட விரும்பும் எடியூரப்பா, சிவமொக்காவுக்கு பெங்களூரு என்று பெயரிட தயாரா?. பெங்களூருவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நிலத்தை வாங்க வேண்டும் என்பது பணக்காரர்களின் விருப்பம். இதில் வட இந்தியர்களே அதிகம். இதனாலேயே ஏராளமான நிலங்கள், பண்ணை வீடுகளுக்கு பலியாகிவிட்டன. ராமநகரின் பெயர் மாற்றம், இத்தகைய பணக்காரர்களுக்கு தானே தவிர விவசாயிகளுக்கு அல்ல.
ராமநகர் தாலுகாவின் பெயர் முன்பு குளோஸ்பேட்டை என்று இருந்தது. முன்னாள் முதல்-மந்திரி கெங்கல் அனுமந்தய்யா, ராமநகர் தாலுகா என்று பெயர் மாற்றம் செய்தார். அதே பெயரை நான் மாவட்டத்திற்கு வைத்தேன். அதனால் ராமநகர் பெயரை மாற்றுவது, கெங்கல் ஹனுமந்தய்யாவுக்கு இழைக்கப்படும் அவமானம் ஆகும். பாலகங்காதாரநாத சுவாமி, சிவக்குமார சுவாமி போன்ற மகான்கள் பிறந்த மாவட்டம் ராமநகர். இந்த மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் முதல்-மந்திரியாக பணியாற்றியுள்ளனர். பெங்களூரு என்று பெயர் மாற்றினால், ராமநகர் தனித்தன்மையை இழந்துவிடும்.
ராமநகரை மலைகள் சூழ்ந்துள்ளன. 7 மலைகளின் மத்தியில் ராமநகர் மலை அமைந்துள்ளது. ராமர் பெயரையே மாவட்டத்திற்கு சூட்டியுள்ளேன். இதையும் மீறி பெயரை மாற்றினால், அது பா.ஜனதாவின் கொள்கைக்கு களங்கம் ஏற்படும். ராமர் பெயருக்கு அவமானம் உண்டாகும். அதனால் ராமநகர் மாவட்டத்தின் பெயரை மாற்றும் முடிவை முதல்-மந்திரி எடியூரப்பா உடனே கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.