பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டையை சேர்ந்தவர் காளிமுத்து சேர்வை. இவருடைய பேரன் லெனின். இவருக்கு சொந்தமான இடத்தில் 10 முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த நிலையில் லெனிக்கும், அவருடைய நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கும் இடையே நிலப்பிரச்சனை ஏற்பட்டது.
இதுதொடர்பான வழக்கு பாபநாசம் உரிமையியல் கோர்ட்டில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பிரச்சினைக்கு பாபநாசம் கோர்ட்டில் செயல்பட்டு வரும் சமரச தீர்வு மையத்தின் மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமரச மையத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.ராஜசேகர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் இரு தரப்பு வக்கீல்கள் வெற்றிச்செல்வன், மணிகண்டன் ஆகியோர்கள் பங்கேற்றனர். இதில் 10 முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்கு, காளிமுத்து சேர்வை நகர் என பெயரிட்டு, அங்கு 10 குடும்பங்களும் நிரந்தரமாக வசிக்கவும், இந்த நிலத்தை அவர்களுக்கு தானமாக நிபந்தனையின்றி வழங்கவும் லெனின் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நிலத்தில் குடியிருப்பதற்கான ஆணையை நீதிபதி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினார். தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.