கடத்தூர்,
கோபி மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 42). இவர் கோபி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் ராஜதுரை(வயது 45). அவருடைய மனைவி ஸ்வேதா(35). இவர்கள் 2 பேர் உள்பட 5 பேர் என்னை சந்தித்து, உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறது. அதில் பணத்தை முதலீடு செய்தால் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கும் என்று கூறினர். அதனை நம்பி நான் நிறுவனத்தில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை முதலீடு செய்தேன்.
நான் செலுத்திய பணத்துக்கு 4 மாதங்கள் கமிஷன் கிடைத்தது. அதன்பிறகு கமிஷன் கொடுக்கவில்லை. இதனால் ராஜதுரை, ஸ்வேதா உள்பட 5 பேரிடம் நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், அந்த நிறுவனம் குறித்து விசாரித்த போது அது டெல்லியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் என்ற பணமில்லாத பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதன் மூலம் நாடு முழுவதும் ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் மூலம் பலகோடி ரூபாய்களை வசூலித்து பெரும் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம். எனவே போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.