நெல்லை,
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை தொகுதியில் 26 பேரும், தென்காசி தொகுதியில் 25 பேரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர பகுதிகளில் போலீசாருடன், துணை ராணுவ வீரர்களும் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்புலன்ஸ்களில் பணம் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையில் நேற்று 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தங்களது பகுதி வழியாக வந்த ஆம்புலன்ஸ்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தாசில்தார் முருகேசன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ்களை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் பணம் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் அதுதொடர்பாக பொதுமக்கள் 1950 என்ற தேர்தல் கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம். மேலும் புகைப்படம், வீடியோ எடுத்தும் புகார் அளிக்கலாம். அதனை சிவிஜிஸ் எனப்படும் செல்போன் செயலி மூலம் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து நேரடியாக புகைப்படம், வீடியோ எடுத்து புகார் அளிக்கலாம் என்றனர்.