செய்திகள்

சென்னையில் பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகை

சென்னை தீவுத்திடலில் பேரிடர் மீட்பு பயிற்சி தொடர்பான கண்காட்சியும், துறைமுகத்தில் ஒத்திகையும் நடந்தது.

தினத்தந்தி

சென்னை,

புயல், வெள்ளம் ஆகிய பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சிகள் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கின. முதல் நாளான நேற்று முன்தினம் கருத்து பட்டறை நடந்தது.

இந்தநிலையில் 2-வது நாளான நேற்று தீவுத்திடலில் பேரிடர் கால மீட்பு தொடர்பான சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியை வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் தொடங்கிவைத்தார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வா, தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அதிகாரி கே.ஜே.குமார், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் இந்திய விமான நிலைய ஆணையம், கடலோர காவல்படை, இந்திய செஞ்சிலுவை சங்கம் (ரெட் கிராஸ்) பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழக சுகாதாரத்துறை, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, தமிழக மீன்வளத்துறை, தேசிய பேரிடர் மீட்பு ஆணையம், தமிழக பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த அரங்குகளில் பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பாக மீட்க உதவும் உபகரணங்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை கண்டறிய உதவும் கருவிகள், தீ விபத்துகளின்போது பயன்படும் நவீன எந்திரங்கள் மற்றும் கருவிகள், மரக்கழிவுகள் மற்றும் இடிபாடுகளை அகற்ற எந்திரங்கள், ஆளில்லா விமான ரக கேமராக்கள், சென்சார் தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. இந்த கருவிகளை வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகை நடந்தது. இதில் வெள்ளத்தின் போது பொதுமக்களை மீட்க மற்றும் இடிபாடுகளை அகற்ற உதவும் புரோனிங் மெஷின், டெவேட்டரிங் பம்ப், ஆம்பிபியன் மெஷின், ரோபோடிக் மல்டிபர்போஸ் எக்ஸ்கவேட்டர் உள்ளிட்ட ராட்சத எந்திரங்கள் இடம்பெற்றன. எத்தகைய இடிபாடுகளையும் கடந்து சென்று பொதுமக்களை மீட்கும் இந்த எந்திரங்களின் செயல்திறன் பார்வையாளர்களை அசர செய்தது. தீயணைப்பு துறை மூலம் ராட்சத ஏணிக்களும் வைக்கப்பட்டிருந்தன.

இடிபாடுகளின்போது மீட்பு பணியில் பேருதவியாக இருக்கும் ஏர்லிப்டிங் பேட் இடம்பெற்று இருந்தது. சிறிய இடைவெளியில் இந்த பேடுகளை நுழைத்து, டியூப்பின் வழியாக அந்த பேடில் காற்று நிரப்பப்படும். இதன்மூலம் இடிபாடுகள் தளர்த்தப்பட்டு, அதில் யாராவது சிக்கியிருந்தால் உடனடியாக காப்பாற்ற முடியும்.

குறிப்பாக இந்திய விமான நிலையம் ஆணையம் சார்பில் விமானம் மற்றும் விமான தளத்தில் ஏற்படும் எதிர்பாராத தீ விபத்துகளில் தீயை அணைக்கவல்ல ரோசன்பேரர் பாந்தர் 36.700 ரக தண்ணீர் பீய்ச்சியடிக்கும் எந்திரம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. ஒரு நிமிடத்தில் 4 ஆயிரத்து 750 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்ட இந்த எந்திரம், நீண்ட தூரத்துக்கு தண்ணீரை பீய்ச்சியடிக்க வல்லது. இந்த எந்திரத்தின் சோதனை திறனை பார்த்து பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

மேலும் பேரிடர் காலத்தில் அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருக்கும் மக்களை கண்காணிக்கும் ஆளில்லா விமான கேமராக்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியோரை அடையாளம் காணும் விக்டிம் லொகேஷன் கேமரா உள்ளிட்டவை பார்வையாளர்களை மிரள செய்தது. மேலும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மிக்கி, லக்கி, ஹண்டர் எனும் 3 மோப்ப நாய்களும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை