கோவை,
கோவையில் ரேஸ்கோர்ஸ், காட்டூர், ஆர்.எஸ்.புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோனது. இந்த திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள், தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விக்னேஷ் பரத் (வயது 25), மருதாசலம் (22) என்பது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள், இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் பரத், மருதாசலம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மெக்கானிக் சபரி (20), விசைத்தறி தொழிலாளி ரமேஷ் (33), பிரபாகரன் (23), விக்னேஷ்வரன் (22), அப்துல்ரகீம் (22) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கைதானதில் 5 பேர் இருசக்கர வாகனங்களை திருடுபவர்கள். அவர்கள் திருடும் வாகனங்களை ரமேசிடம் கொடுத்துள்ளனர். அந்த வாகனங்களின் பாகங்களை மெக்கானிக் சபரி மூலம் வேறுவாகனம் போல் மாற்றி விற்பனை செய்து உள்ளனர். கைதான 7 பேரிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களை பிடிக்க தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.