கோவை,
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரெயில் கடந்த சனிக்கிழமை கோவை ரெயில் நிலையம் வந்தது. அந்த ரெயில் கோவையில் ஒரு மணி நேரம் நின்ற பிறகு மாலை 6.30 மணிக்கு ஈரோடு புறப்பட்டது. அந்த ரெயில் சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று மீண்டும் புறப்பட்டபோது நடைமேடையில் நடந்து சென்ற சிலர் ரெயில் என்ஜினில் உடல் சிக்கியிருப்பது போல தெரிகிறது என்று என்ஜின் டிரைவரிடம் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது என்ஜினில் ஒரு ஆணின் உடல் சிக்கியிருப்பது தெரியவந்தது. உடனே ரெயில்வே ஊழியர்கள் உதவியுடன் என்ஜினில் சிக்கி இருந்த உடல் மீட்கப்பட்டது. இதைபார்த்த பயணிகள் பீதி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்துக்கு பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யேசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும்.
அவர் சிவப்பு நிற சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்து இருந்தார். அவருடைய முகம் முழுவதும் சிதைந்து இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
கோவையில் இருந்து ஈரோடு சென்ற பாசஞ்சர் ரெயில் என்ஜினில் ஒருவர் சிக்கி இறந்துள்ளார். அவர் ரெயில் என்ஜினில் எப்படி சிக்கினார்? என்பது தெரியவில்லை. அந்த ரெயில் பாலக் காட்டில் இருந்து கோவை வந்து அங்கு ஒரு மணி நேரம் நின்று அதன்பின்னர் ஈரோடு புறப்பட்டு உள்ளது.
அந்த ரெயில் என்ஜின் கோவையில் நின்றபோது அதில் சிக்கி இறந்தாரா? அல்லது பாலக்காட்டில் நின்றபோது சிக்கினாரா? என்பது தெரியவில்லை. மேலும் அந்த நபர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு உடல் என்ஜினில் சிக்கி கொண்டதா? இல்லை தற்கொலை செய்துகொண்டாரா? என்பதும் தெரியவில்லை.
முகம் முழுவதும் சிதைந்து இருந்ததால் அந்த உடல் ரெயில் என்ஜினில் சிக்கி பல கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.