புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 49 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, புதிய உச்சம் தொட்டுள்ளது. இது மக்களிடையே பீதியை கிளப்புவதுபோல அமைந்தாலும் கூட பயப்படத்தேவையில்லை.
ஏனென்றால் இதே போன்று கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்புவதிலும் நேற்று புதிய உச்சம் ஏற்பட்டது. அது, 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 602 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பியது ஆகும்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து இந்தியாவில் மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 17 ஆயிரத்து 208 ஆகும்.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதமும் 63.45 சதவீதம் என்ற புதிய உயரத்தை எட்டி உள்ளது.
தொடர்ந்து குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் எண்ணிக்கை, தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட 3 லட்சத்து 77 ஆயிரத்து 73 அதிகமாக உள்ளது.
இந்த வகையில் இப்போது தொடர்ந்து சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 ஆகும்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளால், கொரோனாவில் சிக்கியவர்களை மீட்டெடுப்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இப்போது இறப்புவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தற்போது இந்தியாவில் கொரோனா இறப்பு வீதம் என்பது 2.38 சதவீதமாக உள்ளது.
கொரோனா நோயாளிகள் ஏராளமான எண்ணிக்கையில் தொடர்ந்து தொற்றில் இருந்து மீண்டு குணம் அடைவது என்பது மத்திய அரசின் வழிகாட்டுதலின்கீழ் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் நன்றாக கட்டமைத்தும், செயல்படுத்தியும் உள்ள உத்திகளின் விளைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.