காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் நகரின் அடையாளங்களுள் ஒன்றாக இருக்கும் பட்டு சேலை வாங்குவது வழக்கம். அவ்வாறு, வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும், வாடிக்கையாளர்களையும் குறிவைத்து, பட்டு சேலை கடைகளுக்கு அழைத்து செல்லும் தரகர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறைந்த விலையில் பட்டு சேலைகள் வாங்கலாம் என்று கூறி பல தரகர்கள் தொந்தரவு செய்வதாகவும், தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதாகவும், சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். தரகர்களின் வழிகாட்டுதலால், போலியான பட்டு சேலைகளை, சுற்றுலா பயணிகள் வாங்கி செல்வதும் அதிகமாகியுள்ளது. தொல்லை தரும் தரகர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.