மஞ்சூர்,
மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டுயானை, சிறுத்தைப்புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாத காலங்களாக சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொல்வது தொடர்கதையாகி வருகிறது. மேலும் காட்டெருமைகள் தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிகின்றன. அவை தாக்கி இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் காட்டுயானைகளும் வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் மஞ்சூர்-கோவை சாலையின் குறுக்கே வாகனங்களை அவ்வப்பொழுது வழிமறிப்பதும் நடந்தேறுகிறது. இதனால் வனவிலங்குகளால் எப்போது ஆபத்து வருமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் மஞ்சூர் அருகே உள்ள மஞ்சக்கம்பை பஜாரில் காட்டுயானைகள் புகுந்தன. மேலும் அங்கிருந்து மஞ்சக்கம்பை கோவில் வழியாக சென்று மாசிக்கண்டியில் நேற்று அதிகாலை உலா வந்தன. பின்னர் அதனருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் காட்டுயானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஊருக்குள் காட்டுயானைகள் உலா வந்ததால், பீதியில் கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வேலைக்கு செல்லாமல் நேற்று வீடுகளிலேயே முடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.