ஊட்டி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு கோடை சீசனையொட்டி 123-வது மலர் கண்காட்சி வருகிற 17-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 5 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து 230 ரகங்களை சேர்ந்த மலர் விதைகள் பெறப்பட்டு நர்சரியில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டன.
கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நடைபாதை ஓரங்கள், பாத்திகள் மற்றும் மரங்களை சுற்றிலும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இதனை பூங்கா ஊழியர்கள் பராமரித்து தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். ஊட்டியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், பூங்காவில் உள்ள புல்வெளிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் பூந்தொட்டிகள் மற்றும் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இது சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விருந்தளிக் கிறது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண பூந்தொட்டிகளை மலர்மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று தொடங்கி வைத்தார்.
இதில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நடப்பாண்டில் சிறப்பம்சமாக இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பிகோனியா, செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், ஓரியண்டல்லில்லி, கிரைசாந்திமம், வின்கா, காம்ப்ரினா, கேம்பனுலா, கைலார்டியா,
க்ளேடியோலஸ், கேல், சினரேரியா, க்ளாக்சீனியா மற்றும் புதிய ரக, குட்டை ரக ஜெர்புரா, கேலஞ்சியோ, டெல்பீனியம், ஆன்டிரைனம், கேனா, நிமேசியா, பால்சம், ஜிப்சோபில்லா, ஜினியா, செலோசியா, அரிய வகை ரனன்குலஸ், டியூபரஸ், பாயின் சிட்டியா உள்பட 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த பல வண்ண மலர்கள் அடங்கிய 35 ஆயிரம் பூந்தொட்டிகள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.