பொள்ளாச்சி,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தமிழ கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள், படங்களை பதிவிறக்கம் செய்தவர்கள், அதை விற்றவர்கள், மற்றவர்களுக்கு அனுப்பியவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கோவை மாவட்ட போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சமூக ஊடக பிரிவினர் சமூக வலைதளங்களை கண்காணித்து வந்தனர். அப்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த ரென்டா பாசுமாடரி (வயது 23) என்பவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது தெரியவந்தது.
மேலும் அவர், பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்துக்கொண்டு ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சமூக ஊடகபிரிவினர், எழுத்துப்பூர்வமாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, ரென்டா பாசுமாடரியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில், குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையிலான போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது, தனக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. இதனால் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். நான் பார்க்கும் படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தேன். தனது நண்பர்களுக்கும், குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியதாக ரென்டா பாசுமாடரி தெரிவித்தார். இதையடுத்து பொள்ளாச்சி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரென்டா பாசுமாடரியை கைது செய்தனர்.
இதுகுறித்தது கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறும்போது, குழந்தைகளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைத்திருப்போர், சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது தொடர்பாக சென்னையில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முதன்முறையாக வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.