செய்திகள்

ஊரக உள்ளாட்சிகளில் வெற்றி பெற போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை மதியத்துக்கு பிறகு முடிவு தெரியும்

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மதியத்துக்கு பிறகு முடிவுகள் வெளியாகும்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது.

91,975 பதவிகள்

சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.

மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற் கான தேர்தல் நடந்தது.

முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

315 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை

தமிழகத்தில் உள்ள 315 மையங்களில், சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டு சீட்டுகள் அடங்கிய அனைத்து வாக்குப்பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொது வான வாக்கு எண்ணும் அறைக்கு முதலில் கொண்டு செல்லப்படுகின்றன.

4 ஓட்டுகள்

தேர்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்து உள்ளனர். முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள 30 மேஜைகளில் ஓட்டுகள் கொட்டப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 ஓட்டு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான ஓட்டுகளை அடுக்கி, தனித்தனியாக பிரிப்பார்கள்.

4 பதவிகளுக்கும் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் முடிவுகள்

இந்த 4 அறைகளுக்கும் அந்தந்த அறைகளுக்கான ஓட்டுகள் கொண்டு செல்லப்படும். பின்னர் யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி வாரியாக போடப்பட்ட வாக்குகள் பிரித்து எண்ணப்படும். 8 ரவுண்டுகளாக ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கும். ஓட்டுகளை பிரிக்கும் பணியே இன்று பகல் 1 மணிக்கு மேல் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஓட்டுகள் எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரம் ஓட்டுகளுக்கு குறைவாகவும், ஊராட்சி தலைவர் பதவிக்கு சில ஆயிரம் ஓட்டுகள் மட்டும் எண்ண வேண்டியிருப்பதால் இன்று மதியத்துக்கு பிறகு முடிவுகள் தெரியவரும்.

ஆனால் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வரை இருக்கும் என்பதால் இன்று பிற்பகலில் இருந்து படிப்படியாக முடிவுகள் தெரியவரும். முடிவுகள் அனைத்தையும் இரவுக்குள் முழுமையாக வெளியிட மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வீடியோவிலும் காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது.

6-ந் தேதி கூட்டம்

ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஒன்றியக் குழு கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்கு உடன் வெற்றி பெற்றதற்கான அதிகாரபூர்வ சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதைத் தொடர்ந்து வரும் 6-ந் தேதி கிராம ஊராட்சி அமைப்புகளுக்கான கூட்டம் நடைபெறுகிறது. அதன்பிறகு 11-ந்தேதி கிராம ஊராட்சியின் துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர், ஒன்றியக் குழு துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ளவர்கள் இந்த பதவிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வார்கள்.

மாநகராட்சி தேர்தல்

அடுத்த கட்டமாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றுக் கான தேர்தலை வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்து வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு