சேலம்,
சேலம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் இருந்தது. இந்த பணம் குறித்து வாகனத்தில் இருந்த வியாபாரி டி.பெருமாபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 26) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனால் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அம்மாபேட்டை சேலம்-சென்னை குமரகிரி பைபாஸ் சாலையில் பறக்கும் படை அதிகாரி செல்வம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த அம்மாபேட்டையை சேர்ந்த பரத் (26) என்பவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.