செய்திகள்

சாத்தான்குளத்தில் 31-ந் தேதி வரை முழு ஊரடங்கு: கடை அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி சாத்தான்குளத்தில் நேற்று முதல் 31-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

தினத்தந்தி

சாத்தான்குளம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கை அறிவித்து பொதுமக்கள் வெளியே வருவது குறைக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடந்த வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கினர். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் சாத்தான்குளத்தில் நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நேற்று முழு ஊரடங்கை ஒட்டி சாத்தான்குளத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. காமராஜர் சிலை பகுதி, முதலூர் சாலை, பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி கடைகள், ஆடு, கோழி இறைச்சி கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. டீக்கடை, பெட்டிக்கடை, பல சரக்கு கடை, ஜெராக்ஸ் கடை, இரும்பு கடை, பிளேவுட் கடை, ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதனால் சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகனங்கள் ஓடாததால் அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி விளக்கம் கேட்டனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்