செய்திகள்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற வேண்டும் டி.டி.வி.தினகரன் பேச்சு

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

தினத்தந்தி

திருவெறும்பூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று முதல் தொடங்கி நாளை (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசுகிறார்.

இதற்காக நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த அவர் நேற்று மாலை பொன்மலை கல்கண்டார்கோட்டை பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார். அப்போது அங்கு திரண்டு நின்ற மக்கள் டி.டி.வி.தினகரனுக்கு பூரணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் முன்பு டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி ஜெயலலிதா பெயரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றுகிற ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இது ஜெயலலிதாவின் ஆட்சி என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும் இவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ஊர்மக்கள் போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் கைது செய்தார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் அந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டார்.

இதேபோல் தமிழக மாணவ-மாணவிகளை பாதிக்கக்கூடிய நீட்தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா நிராகரித்தார். இந்த தேர்வு மூலம் கிராமப்புற மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேருவது குதிரை கொம்பாக இருக்கிறது. ஆனால் தற்போது மத்தியில் ஆளுகிறவர்கள் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. 4 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒன்றுமே செய்யாதவர்கள், தற்போது இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளார்கள். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார்கள்.

ஆனால் அவர்களுடைய வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்பாமல் பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் ஜெயலலிதாவுக்கு வெற்றியை வழங்கினார்கள். ஆனால் தற்போது இவர்கள் மத்திய அரசின் கிளை அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறார்கள். வருகிற தேர்தலில் இவர்களை டெபாசிட் இழக்க செய்வதன் மூலம் மத்திய அரசுக்கும், அவர்களுடைய ஏஜெண்டாக செயல்படும் தமிழக அரசுக்கும் முடிவு கட்ட வேண்டும். துரோகம் செய்தவர்களுக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசு கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு தற்போது இல்லை என்கிறார்கள். தமிழக மக்களின் மீது அக்கறை உள்ள கட்சியான ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால் வழிநடத்தப்படுகிற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்க வேண்டும். காங்கிஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு என்ன நல்ல திட்டங்கள் கிடைத்தது என்று எண்ணி பார்க்க வேண்டும்.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். அதைபோல 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் கடந்த முறை போட்டியிட்ட குக்கர் சின்னத்தை கூட பெறவிடாமல் துரோகிகள் தடை செய்ய முயற்சிக்கிறார்கள்.

ஆனால் உச்சநீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருகிறது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று அனைவருக்குமான இயக்கமாக செயல்படும். அ.ம.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த பகுதியில் உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கு மாற்றப்படும். இதேபோல் துவாக்குடி சர்வீஸ்ரோடு அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். வருகிற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து, குண்டூர், நவல்பட்டு அண்ணாநகர், சோழமாதேவி, திருவெறும்பூர், துவாக்குடி அண்ணாவளைவு, வாழவந்தான்கோட்டை, காட்டூர் உள்ளிட்ட இடங்களில் பேசினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்