மும்பை,
தூய்மை இந்தியா திட்ட நிறைவு விழாவையொட்டி டெல்லியில் நடந்த மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாட்டில் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். கூட்டத்தில் மத்திய மந்திரி உமா பாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
கடந்த 1947-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மராட்டியத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மராட்டியத்தில் 60 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்காக மத்திய, மாநில அரசு ரூ.4 ஆயிரத்து 500 கோடி செலவிட்டு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் 12 கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால் அதை மக்கள் யாரும் பயன்படுத்தவில்லை. திறந்த வெளியை தான் பயன்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் கழிவறை கோப்பையில் மண்ணை போட்டு மூடி பொருட்கள் வைக்கும் அறையாக மாற்றிவிட்டனர்.
அரசு அடுத்த கட்டமாக புதிதாக கட்டப்படும் கழிப்பறைகளை பயன்படுத்தும் வகையில் மக்களின் மனநிலையை மாற்றுவதற்கான பணியில் ஈடுபட உள்ளது. மேலும் கழிவறைகளுக்கு தேவையான தண்ணீர் வசதியை விரைவில் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.