செய்திகள்

மகனின் காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை காதலியின் தந்தை உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

லாலாபேட்டை அருகே மகனின் காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காதலியின் தந்தை உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கம்மநல்லூரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55). விவசாயி. இவரது மகன் மணிவண்ணன் (25). இவர், கரூரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிச்சமுத்து. இவரது மகள் கீர்த்தனா (18). பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

இந்தநிலையில் மணிவண்ணனும், கீர்த்தனாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கீர்த்தனாவிடம் செல்போன் இல்லாததால் மணிவண்ணனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவர், தனது சொந்தசெலவில் கீர்த்தனாவுக்கு புதிதாக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். அதன் மூலம் இருவரும் பேசி காதலை வளர்த்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

பெற்றோர் கண்டிப்பு

இதில் பங்கேற்பதற்காக கீர்த்தனா தனது குடும்பத்தினருடன் சென்றார். அப்போது, அவர் செல்போன் வைத்திருந்ததை பார்த்த பெற்றோர், அதனை வாங்கி கொடுத்தது யார்? என கேள்வி எழுப்பினர். அப்போது கீர்த்தனா மழுப்பலாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கீர்த்தனாவுக்கு, மணிவண்ணன் செல்போன் வாங்கி கொடுத்ததை அறிந்து, அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கீர்த்தனாவை கண்டித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கோவில் திருவிழா தொடர்பாக ஊர் பொதுக்கூட்டம் கம்மநல்லூர் காலனியில் நடந்தது. ஊர்பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிச்சமுத்து, அவரது தம்பி முருகானந்தம் ஆகியோர் பரமசிவத்தின் வீட்டிற்கு சென்று, எப்படி கீர்த்தனாவுக்கு, உனது மகன் செல்போன் வாங்கி கொடுக்கலாம்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விவசாயி வெட்டிக்கொலை

தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பிச்சமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பரமசிவத்தை வெட்டினார். முருகானந்தம் தான் வைத்திருந்த கம்பியால் அவரை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மணிவண்ணனும் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அரிவாள்வெட்டில் படுகாயம் அடைந்த பரமசிவம் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். அங்கு ஊர் பொதுமக்கள் கூடியதை அடுத்து பிச்சமுத்து, முருகானந்தம் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த பரமசிவம் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரமசிவம் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே ஆஸ்பத்திரியில் பரமசிவத்தின் உறவினர்கள் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பிச்சமுத்து, அவரது தம்பி முருகானந்தம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை