தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 137 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. நேற்று 2 பெண்கள் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2 பெண்களும் தேனி அருகே உள்ள ரத்தினம் நகரை சேர்ந்தவர்கள். மற்றொருவர் பெரியகுளத்தை சேர்ந்தவர்.
ரத்தினம் நகரை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வயது 17. அவர் சென்னை சூளைமேடு பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் மற்றும் குடும்பத்தினர் 9 பேர் 2 கார்களில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், தேவதானப்பட்டி சோதனை சாவடியில் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு மட்டும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தினம் நகரை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு வயது 53. அவர் தனது கணவருடன் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே அணக்கரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். ஊரடங்கால் அங்கே சிக்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வந்த நிலையில், லோயர்கேம்ப் சோதனை சாவடியில் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த பெண்ணுக்கு மட்டும் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பெரியகுளம் டாக்டர்
பாதிக்கப்பட்டவர்களில் பெரியகுளத்தை சேர்ந்தவர் 70 வயது டாக்டர். இவர் அரசு டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரியகுளம் காளத்தீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியில் மருத்துவமனை அமைத்து குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தேனியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்தார். பின்னர் அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை மூடல்
இதையடுத்து பெரியகுளத்தில் அவர் நடத்தி வந்த மருத்துவமனை மற்றும் தேனியில் அவர் பரிசோதனை செய்த ஸ்கேன் மையம் மூடப்பட்டது. இரு இடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. டாக்டருக்கு பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர் வீடு அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டு இருந்த 137 பேரில் 2 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த இருவரும் தேனி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சென்னை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், தேனி மாவட்ட பாதிப்பு 135 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.