செய்திகள்

விழுப்புரத்தில், தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை - மனஅழுத்தத்தால் இறந்ததாக கூறி சக ஆசிரியர்கள் போராட்டம்

விழுப்புரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மனஅழுத்தத்தால் இறந்ததாக கூறி சக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் கம்பன் நகர் தமிழ் செம்மொழி தெருவில் வசித்து வந்தவர் ராஜமாணிக்கம் (வயது 49). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மேற்கொண்டு படித்து வேறு பதவிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் கடந்த சில மாதமாக சரிவர வீட்டிற்கு செல்லாமல் பள்ளியிலேயே அதிக நேரம் இருந்து படித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் பள்ளியில் இருந்து ஆசிரியர் ராஜமாணிக்கம் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு நீளமான துண்டினால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பிளஸ்-1 பொதுத்தேர்வு நடந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்படவில்லை. இதனால் ராஜமாணிக்கத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த சக ஆசிரியர்கள் செல்ல முடியவில்லை. இருப்பினும் மதியத்திற்கு பிறகு பள்ளி விடுமுறை விடப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் அதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரிய, ஆசிரியைகள் மதியம் 1.30 மணியளவில் பள்ளியின் நுழைவுவாயில் கதவை இழுத்து மூடி பள்ளியின் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜ மாணிக்கம் மனஅழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார் என்றும், அவருக்கு ஏற்பட்ட நிலைமை எங்களுக்கும் ஏற்படக்கூடாது என்று கூறி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், சேதுராமன், பாலசிங்கம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று மாலை 3 மணியில் இருந்து பள்ளி வளாகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர்கள் கூறுகையில், எங்களுக்கு தகுதித்தேர்வு என்ற பெயரில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது, மூத்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்க முயற்சி செய்யக்கூடாது, தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, எங்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த பள்ளி நிர்வாகத்தினர், இதுசம்பந்தமாக கோரிக்கை மனு கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன்பேரில் ஆசிரியர்கள், தங்களது கோரிக்கையை மனுவாக எழுதிக்கொடுத்தனர். மனுவை பெற்ற பள்ளி நிர்வாகத்தினர், இதுகுறித்து தலைமை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வார காலத்திற்குள் சுமூக முடிவை கூறுவதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் மாலை 6.45 மணிக்கு தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்