செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 500 ஆம்புலன்ஸ் நெல்லை உள்பட மேலும் 7 இடங்களில் ‘பிளாஸ்மா’ வங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் நெல்லை உள்பட மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நெல்லை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிதாக பிளாஸ்மா வங்கி நேற்று(புதன்கிழமை) தொடங்கப்பட்டது.

இந்த பிளாஸ்மா வங்கியின் செயல்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.2 கோடியே 34 லட்சம் செலவில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முதல் முறையாக 2 பேர் பிளாஸ்மா தானம் கொடுத்து தொடங்கி உள்ளனர்.

இந்த பிளாஸ்மா வங்கியில் ஒரே நேரத்தில் 7 பேர் தானம் கொடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தானம் செய்யப்பட்ட பிளாஸ்மாவை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவு குளிரில் வைத்து, ஓராண்டு வரை பாதுகாத்து பயன்படுத்தலாம். தமிழகம் தானம் செய்வதில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் பிளாஸ்மா வழங்க முன்வர வேண்டும்

தமிழகத்தில் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என 7 இடங்களில் புதிதாக பிளாஸ்மா வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 4 பேர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம் அடைந்துள்ளனர். இதைப்போல் ரெம்டெஸ்வியர் மருந்தின் சோதனையும் இங்கு வெற்றிகரமாக சென்று வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 93 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 9,220 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆயிரம் படுக்கைகள் உள்ளது. இதில் 50 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது. கொரோனா சிகிச்சை மையங் களிலும் 80 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது.

தமிழகத்தில் 1 கோடியே 58 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் கூடுதலாக 500 ஆம்புலன்சுகள் புதிதாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 100 ஆம்புலன்ஸ்கள் ஒரு மாதத்தில் வாங்கப்பட உள்ளது. உடனடியாக தேவைப்படும் இடங்களில் வாடகை அடிப்படையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆம்புலன்ஸ் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் டாக்டர் சிவஞானம், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் உமாநாத், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்