முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் போஜாஹரி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷேஷாத். இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் மெஹ்ராசுதீன்.
இந்த நிலையில், மெஹ்ராசுதீன் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். அவரது கோழி குஞ்சுகள் ஷேஷாத்தின் வீட்டிற்குள் இரை தேடி சென்று உள்ளது.
இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி வன்முறையாக வெடித்தது. இதனை அடுத்து இரு தரப்பினரும் ஆயுதங்கள் மற்றும் கம்புகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து வேறு எந்த சம்பவமும் நடந்து விடாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.