ஜெய்ப்பூர்,
மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒரு மினி பஸ் அரியானா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தில் போகும்போது, திடீர் என்று ஒரு காளை மாடு குறுக்கே பாய்ந்தது.
மாடு மீது பஸ் மோதி விடாமல் இருப்பதற்காக, டிரைவர் திடீர் பிரேக் போட்டார். அப்போது பஸ் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற 6 பேரும் நாகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பலியான 12 பேரில் 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.