புதுடெல்லி,
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் 4 நாள் அரசு முறைப் பயணமாக தனது மனைவியுடன் பிரிகிட்டியுடன் இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி வந்த அவரை பிரதமர் மோடி சிறப்பு நிகழ்வாக விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.
நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில் மேக்ரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அவரையும், அவருடைய மனைவியையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வரவேற்றனர்.
பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், மேக்ரானும் சந்தித்து பேசினர். அப்போது, சீனா தனது கடற்படையை வலுப்படுத்தும் விதமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான டிஜிபவுட்டியில் கடற்படைதளம் அமைத்து இருப்பது குறித்தும், இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கடல் எல்லையை சீனா நீட்டித்து வருவது பற்றியும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்திய பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் சார் பாதுகாப்பில் இணைந்து செயல்படவும், இந்தியாவும், பிரான்சும் பரஸ்பரம் தங்களுடைய கடற்படைத் தளத்தை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. சீனாவை மனதில் கொண்டே இரு தலைவர்களும் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் மோடி, மேக்ரான் முன்னிலையில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளவேண்டிய ஒப்பந்தங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவம், அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, சுற்றுச்சூழல், நகர்ப்புற மேம்பாடு, ரெயில்வே துறைகள் உள்பட மொத்தம் 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதில் கல்வித்துறையில் மட்டும் இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையே தனித்தனியாக 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது மோடி கூறியதாவது:
தரையில் இருந்து ஆகாயம் வரையுள்ள அனைத்து துறையிலும் இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எனவே இது தொடர்பான எதையும் எங்களுடைய பேச்சுவார்த்தையில் நாங்கள் விட்டு வைக்கவில்லை.
2 நாடுகளும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் இன்னும் வலுவான முறையில் ஒருங்கிணைந்து செயல்படும். இதில் நாம் இணைந்து செயல்படுவது 20 ஆண்டு காலத்துக்கு உள்ளாக இருக்கலாம். ஆனால் நமது நாடுகளுக்கு இடையேயான ஆன்மிக பங்களிப்பு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.
இரு நாடுகளின் நாகரிக சமுதாயத்திலும் ஒரே கால கட்டத்தில் இந்தியாவில் ராமகிருஷ்ண பரம்ஹம்சரும், அரவிந்தரும் இருந்தனர். இதேபோல் பிரான்சில் வால்டேர், விக்டர் ஹூயூகோ போன்ற சான்றோர்கள் இருந்தனர்.
இதை எதேச்சையான ஒன்று எனக் கூறி விட முடியாது. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய முழக்கங்கள் பிரான்சில் மட்டும் கேட்கவில்லை. இவை அந்த கால கட்டத்தில் இந்தியாவிற்கும் பொருத்தமான ஒன்றாகத்தான் இருந்தது.
இந்தியாவும், பிரான்சும் பாதுகாப்புத்துறையில் மிகவும் வலுவான உறவைக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு பிரான்ஸ் ஆதரவளிக்க உறுதிக்கொண்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேக்ரான் பேசும்போது, பயங்கரவாத அச்சுறுத்தல்களையும், பயங்கரவாதத்தையும் கையாளுவதில் இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்படும். இந்திய பெருங்கடல் பகுதியில் ஸ்திரத்தன்மை இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் இந்த நிலை இருக்கும் என்றார்.
அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பிரான்ஸ்இந்திய நிறுவனங்கள் இடையே 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு(ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.