மண்டியா:
இந்து கோவில்கள்
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஹிஜாப், ஹலால் பிரச்சினைகளை தொடர்ந்து முஸ்லிம் மசூதிகளில் இந்து கோவில்கள் இருப்பதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா டவுன் பகுதியில் ஜாமியா மசூதி உள்ளது. மசூதி உள்ள இடத்தில் இதற்கு முன்பு அனுமன் கோவில் இருந்ததாகவும், அதனை அழித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் குவிப்பு
இந்த நிலையில் மசூதியை இடித்து அந்த இடத்தில் இந்து கோவில் கட்டப்படும் என்றும், அந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க கோரி ஸ்ரீராம சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஜாமியா மசூதி நோக்கி இந்து அமைப்பினர் பேரணி நடத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டார். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க டவுன் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், போலீஸ் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்றது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தள்ளுமுள்ளு
இந்த நிலையில் நேற்று 144 தடை உத்தரவை மீறி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் காவி உடைகள் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணி நடத்தினர். மேலும், அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து விசுவ இந்து அமைப்பினர் அந்த பகுதியில் இருந்து கோவிலுக்கு சென்று பஜனையில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பஜனை செய்தனர். மேலும், அவர்கள் "ஜெய் ஸ்ரீராம்" மற்றும் அனுமன் பாடல் வரிகளை முழக்கமிட்டனர். மேலும், மசூதியில் ஆய்வு நடத்தி, அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.