மும்பை,
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லகானி என்னுமிடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அதே போல் ராய்காட் மாவட்டத்தின் மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி மீது டெம்போ பயங்கரமாக மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அதே மாவட்டத்தின் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தர்னாசிவாடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய மற்றொடு விபத்தில் இருவர் மரணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 3 வெவ்வேறு சாலை விபத்துகளில் 15 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துகளுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.