புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.
இதனால் கடந்த 3 நாட்களில் 2 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு உள்ளன. இதில் முதல் நாளான 21-ந்தேதி மட்டுமே 88 லட்சத்துக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டன. இந்த பணிகளை தொடர்ந்து அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களிடம் 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 30 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 450 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 29,04,04,264 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது.
தற்பேது 1 கேடியே 50 லட்சத்து 28 ஆயிரத்து186 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 47,00,000 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கைய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், நாள்தோறும் 50 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.