தேசிய செய்திகள்

17 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் தலித் பட்டியலில் சேர்ப்பு: யோகி அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை

உத்தரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு 17 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை தலித் பட்டியலில் சேர்த்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு கடந்த ஜூன் 24-ந்தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், காஷ்யப், ராஜ்பார், திவார், பிந்த், கும்ஹார் உள்ளிட்ட 17 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் தலித் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களும், கமிஷனர்களும் இந்த சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு தலித் சமுதாயத்தினருக்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசும் இதனை விமர்சித்தது. சமூக நீதிக்கான மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் மாநிலங்களவையில் பேசும்போது, உத்தரபிரதேச மாநில அரசின் இந்த நடவடிக்கை அரசியல்சாசனப்படி அமையவில்லை என்று கூறியிருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், இது சட்டவிரோதமானது, அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டது. 341-வது சட்டப்பிரிவுபடி தலித் பட்டியலில் இதர சமுதாயங்களை சேர்க்கவோ, நீக்கவோ எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை. ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர் கோரக் பிரசாத் என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதிர் அகர்வால், ராஜீவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த உத்தரவுக்கு தடை விதித்தது. தலித் பட்டியலை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எந்த அரசுக்கும் இந்த அதிகாரம் இல்லை என்றும் கோர்ட்டு தெரிவித்தது.

ஏற்கனவே 2005-ம் ஆண்டு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசும் 11 சமுதாயத்தினரை தலித் பட்டியலில் சேர்த்தது. கோர்ட்டு இதற்கு தடை விதித்ததும் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. பின்னர் மாயாவதி தலைமையில் அமைந்த பகுஜன் சமாஜ் கட்சி அரசு இந்த அறிவிக்கையை ரத்துசெய்தது. அகிலேஷ் தலைமையிலான அரசு மீண்டும் அதனை இணைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு