தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராணுவம் தரப்பில் பலியான இருவரில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார்.

சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டையின் போது, ராணுவ மேஜர் மற்றும் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த மூன்று பேரும் அருகில் இருந்த ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால்,அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராணுவ மேஜர்,ராணுவ வீரர் ஆகிய இருவரும் வீர மரணம் அடைந்தனர். மற்றொரு ராணுவ வீரர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் நடமாடிய சைபோரா பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.