புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வடக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது இந்திய நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருவதால், வடமேற்கு இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 தினங்களும் புழுதிப் புயல் வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக குஜராத், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த புழுதிப் புயலின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மழை பெய்வதற்கும், காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நாளை பனிப்பொழிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், இந்த மாநிலங்களில் புழுதிப் புயலின் தாக்கம் குறைவாகவும், மற்ற மாநிலங்களில் புழுதிப் புயலின் தாக்கம் அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.