ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜிபுரா பகுதியில் நேற்று மாலை நின்றுகொண்டிருந்த பொதுமக்களில் 2 பேர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.