ஸ்ரீநகர்,
குல்காம் மாவட்டம் குத்வானியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறையின் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் நேற்று மாலையில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படையினர் தொடங்கினர்.
பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை தொடங்கியது. நேற்று இரவு நடைபெற்ற இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது. ஒரு பயங்கரவாதி மட்டும் உயிரோடு சிக்கினான். பயங்கரவாதிகள் யார் என்றும் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்படவில்லை என ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நேற்று இதுபோன்று சோபியான் மாவட்டத்தில் இரு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், ஒரு பயங்கரவாதி சரண் அடைந்தான்.