புவனேஸ்வர்
ஒடிசாவில் முன்னாள் முதல்-மந்திரி, பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான நவீன் பட்நாயக் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, பிரம்மகிரி சட்டசபையை சேர்ந்த எம்.எல்.ஏ., வாக்கு செலுத்தும்போது ஒரு தவறை செய்திருக்கிறார். அந்த தவறை ஏற்று கொண்ட தேர்தல் அதிகாரி, அந்த பெண்ணுக்கு 2-வது முறையாக வாக்களிக்க ஏதுவாக வாக்கு சீட்டை கொடுத்துள்ளார்.
இது தேர்தல் விதிகளுக்கு முரணானது என கூறினார். அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உபாசனா மொகபத்ரா உள்ளார். எனினும் அவருடைய பெயரை குறிப்பிடாமல் பிரம்மகிரி சட்டசபை எம்.எல்.ஏ. என்று மட்டும் பட்நாயக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக தன்னுடைய கட்சி கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால் தேர்தல் நடைமுறையில் ஈடுபட்ட அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவே இல்லை. ஜனநாயக நடைமுறையை முற்றிலும் அழித்து விட்டனர் என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
ஒடிசாவில் குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்றும் தலா ரூ.5 கோடி கொடுத்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க பார்க்கின்றனர் என காங்கிரஸ் கட்சி நேற்று குற்றச்சாட்டு கூறியது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒடிசாவுக்கான செயலாளர் பொறுப்பை வகிக்கும் ஜெட்டி குசம் குமார், எங்களுடைய கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 கோடிக்கான வெற்று காசோலையை கொடுத்து அவர்கள் பக்கம் இழுக்க முயன்ற நபரை பிடித்து விட்டோம்.
அவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஒருவருக்கு எதிராகவும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார். ஒடிசாவில் பா.ஜ.க. வேட்பாளர் திலிப் ராய் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறினார்.
இதேபோன்று, காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உலாகா கூறும்போது, ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.5 கோடி கொடுப்பதற்காக 4 பேர் அணுகினர். பெங்களூருவில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்றார். இந்த சூழலில், நவீன் பட்நாயக் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.