பெலகாவி,
கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. கர்நாடக நீர்ப்பாசன மந்திரியாக ரமேஷ் ஜார்கிகோளி இருந்து வருகிறார்.
அவர் பெலகாவி நகரில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் தலைவரான சித்தராமையா இன்னும் எங்களுடைய தலைவராகவே இருந்து வருகிறார். வேறு கேள்விக்கே இடமில்லை. ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 முறை அவரிடம் நான் பேசுகிறேன்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து எந்த நேரமும் பா.ஜ.க.வில் சேர தயாராக பல முன்னணி தலைவர்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த நாங்கள் 17 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு திரும்பி சென்று விடுவோம் என சிலர் கூறுகின்றனர்.
அது முற்றிலும் தவறானது. திரும்பி செல்வது பற்றி நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. காங்கிரசில் இருந்து பிற தலைவர்கள் உள்பட 20 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர் என மந்திரி ஜார்கிகோளி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க. மற்றும் அக்கட்சியின் பிற மூத்த தலைவர்களையும் ஜார்கிகோளி புகழ்ந்து பேசினார். எந்த நேரத்திலும் தலைவர்களை சந்திக்க முடியும். கட்சி மற்றும் துறை சார்ந்த எந்த விவகாரம் பற்றியும் பேச முடியும். இந்த வாய்ப்பு காங்கிரசில் அளிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.