புதுடெல்லி,
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரும், சிறந்த பொருளாதார வல்லுனருமான ரிச்சர்டு தாலர் (வயது 72) தட்டிச் சென்றுள்ளார். பொருளாதாரத்தின் உளவியல் குறித்த தாலரின் புரிதலுக்காகவும், பொருளாதாரத்தில் அவரது சிறந்த பணிக்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது.
மனிதனின் குணாதிசயங்கள் தனிமனித முடிவுகளையும், சந்தை விளைவுகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தாலரின் பணிநிலை காட்டுவதாக சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறியுள்ளது. முன்னதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் என கிளாரிவேட் அனாலிடிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருந்த பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்று இருந்தது. ரகுராம் ராஜனுக்கு இந்த பரிசு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிச்சர்டு தாலருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் 99 சதவித நோட்டுக்கள் திரும்பிவிட்டது என ஆர்.பி.ஐ. தெரிவித்து உள்ளது. இந்திய அரசின் இந்த அறிவிப்பை முந்தைய ஆண்டுகளில் நோபல் பரிசு வென்றவர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லூநர்கள் எதிர்த்தனர். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ரகுராம் ராஜன் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டிருந்த ரிச்சர்டு தாலர் பரிசை பெறுகிறார்.
இந்திய அரசின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை ரிச்சர்டு தாலர் ஆதரித்தாலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நான் நீண்ட நாட்களாக ஆதரவு தெரிவித்த கொள்கையாகும். பணமில்லா வர்த்தகத்தை நோக்கிய முதல்நகர்வு, ஊழலை ஒழிப்பதில் சரியான தொடக்கம், என இந்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை குறித்து டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.