புதுடெல்லி
பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், சுதந்திரத்திற்கு பின்னர், பா.ஜ.க.வை மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற செய்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் குஜராத் முதல்-மந்திரி மற்றும் பிரதமர் என மொத்தம் 8,931 நாட்கள் தலைமை பதவியை வகித்து, சிக்கிம் முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங்கின் (8,930) சாதனையை முறியடித்து உள்ளார். இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தியில், பல தசாப்தங்களாக மேற்கொண்டு வரும் சேவையால், பிரதமர் மோடி சகாப்தம் ஒன்றை வடிவமைத்து உள்ளார். ஏழைகளுக்கான உரிமைகளை பெற்று தந்ததில் ஆகட்டும், வளர்ச்சியில் புதிய சாதனை அல்லது உலக தளங்களில் தேசத்தின் பெருமையை மிளிர செய்தது என மோடியின் சகாப்தம் இந்தியாவை குறிப்பிடத்தக்க அங்கீகாரம் பெறும் வகையில் உருமாற்றியுள்ளது.
விடுமுறையே இல்லாமல் 24 ஆண்டுகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி உள்ளார். அதனாலேயே, 3 முறை குஜராத் முதல்-மந்திரியாகவும், 3 முறை இந்தியாவின் பிரதமர் ஆவதற்கும் மக்களிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையிலான அன்பை அவர் பெற்றுள்ளார் என்பது தெளிவாக தெரிய வருகிறது. ஒவ்வொரு நாளும் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பாசம் மற்றும் ஆதரவு வளர்ந்து வருகிறது என கூறியுள்ளார்.