2 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல்
மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதே போன்று பா.ஜ.க. ஆட்சி நடக்கிற அசாமில் 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது.இவ்விரு மாநிலங்களிலும் நேற்று இரண்டாவது கட்ட தேர்தலை சந்தித்தன.
மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தல் களம் சூடாகவே இருக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிற நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் மத்திய படை குவிப்புக்கு மத்தியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மிட்னாப்பூர் மாவட்டம், தாத்பூரில் நேற்று முன்தினம் இரவில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வந்து, நீண்ட வரிசைகளில் காத்து நின்று, கையுறையும் அணிந்து கொண்டு தங்கள் வாக்குரிமையை செலுத்தினர். டெப்ரா தொகுதியில் வாக்காளர்கள் திரிணாமுல் காங்கிரசாரால் மிரட்டப்படுவதாக பா.ஜ.க. வேட்பாளர் பாரதி கோஷ் குற்றம் சாட்டினார்.தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் பத்தர்பிரதிமா என்ற இடத்தில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ்காரர் கமல் கங்குலி தூக்கில் பிணமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்சாபாத்தில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டார். கேஷ்பூரில் பா.ஜ.க. பெண் ஏஜெண்டு தாக்கப்பட்டார். அந்த கட்சி உள்ளூர் தலைவர் டான்மே கோஷ் கார் தாக்குதலுக்குள்ளானது. ஆளும் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதாகவும், மத்திய படையினர் செயல்படாததாகவும் அந்த தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் புகார் கூறினார்.மதியம் 2 மணி வரையில் 60 சதவீதத்துக்கும் மேலாக வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே நடந்தது.
முதல்-மந்திரி மம்தா களம் இறங்கி உள்ள நந்திகிராமில் சில வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க.வினர் நுழைந்து தேர்தல் மோசடிகளில் ஈடுபட முயற்சித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். மாநிலத்தில் 150-க்கும் மேற்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் பழுதாகி விட்டதாக அந்த கட்சியின் மற்றொரு எம்.பி. மகுவா மொய்தா கூறினார்.பல இடங்களில் திரிணாமுல் காங்கிரசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன.ஆனாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இளம்வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.மாலை 6 மணிக்கு மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அசாமில் 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட 39 தொகுதிகளில் 310 கம்பெனி மத்திய படை பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனாலும் நேற்று மழை பெய்யாததால் வாக்குப்பதிவு பாதிக்கவில்லை.அங்கு வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். அனைவரும் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றினர். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யுமாறு வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து வாக்கு அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.117 மாதிரி வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.அசாமில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த போது 75 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேற்கு வங்காள மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 31 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் மூன்றாவது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளிலும் 6-ந்தேதி நடக்கிறது.