தேசிய செய்திகள்

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி; 5 பேர் காயம்

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். 5 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேரை காணவில்லை. #Vadodara

வதோதரா,

குஜராத்தில் வதோதரா நகர் அருகே நந்தேஷாரி பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை 6 மணியளவில் கொதிகலன் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது பூச்சி கொல்லிகளை உற்பத்தி செய்யும் கொதிகலன் ஆகும்.

இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேரை காணவில்லை. அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். தீ அணைக்கப்பட்ட நிலையில் குளிர்விக்கும் முறை தொடங்கிய பின்னரே தேடுதல் பணி நிறைவடையும்.

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட கடுமையான வெடிப்பினால் அங்கிருந்து தொலைவில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளும் சேதமடைந்துள்ளன. ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறியுள்ளன.

#Vadodara #fire