மங்களூரு: படகு மீது கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி மாயமானவர்களில் 3 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
3 பேர் பலி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 55 நாட்டிகல் மைல் தொலைவில் அரபிக்கடலில் கடந்த 12-ந்தேதி நள்ளிரவில் தமிழக மீனவர்கள், மேற்கு வங்காள மீனவர்கள் என மொத்தம் 14 பேர் கேரளாவை சேர்ந்தவரின் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சிங்கப்பூர் சரக்கு கப்பல், விசைப்படகு மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தமிழக மீனவர்கள் 2 பேரும், மேற்கு வங்காள மீனவர் ஒருவரும் என 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
2 மீனவர்களை கடலோர காவல் படையினர் உயிருடன் மீட்டனர். மேலும் 9 பேர் கடலில் மூழ்கி மாயமானார்கள். அவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதனால் மாயமான மீனவர்களை கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர்.
3 மீனவர்களின் உடல்கள் மீட்பு
கடலோர காவல் படையினர் இரவு-பகலாக கடலில் மூழ்கி மாயமான 9 மீனவர்களை தேடி வந்தனர். இந்த மீட்பு பணியில் கார்வாரில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சுபத்ரா என்ற ரோந்து கப்பலும், நீச்சல் வீரர்கள் குழுவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. மேலும் கோவாவில் இருந்து கடற்படை விமானங்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
மேலும் கடலோர காவல் படையினருக்கு உதவியாக கர்நாடக மற்றும் கேரள மாநில மீனவர்களும் தங்கள் படகுகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் முழுமையாக மூழ்கியதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தீவிர தேதடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு மாயமான மீனவர்களில் 3 பேரின் உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டனர். பின்னர் அந்த உடல்களை அவர்கள் உடனடியாக மங்களூரு அரசு வென்லாக் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேடும் பணி தீவிரம்
பிணமாக மீட்கப்பட்ட 3 மீனவர்களின் பெயர் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இதையடுத்து கடலோர காவல் படையினர் கப்பல்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் மூலம் மீதமுள்ள 6 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 மீனவர்கள் பிணமாக மீட்கப்பட்டுள்ளதால், மற்ற 6 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கடலோர காவல் படையினர் சந்தேகிக்கிறார்கள். இதுவரை மொத்தம் 6 பேரின் உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.