கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரசில் சேர விருப்பம்
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் எங்களுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சியில் இருந்து விலகி சென்று சுயேச்சையாக போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றையும் சேர்த்தால் எங்கள் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக கருத வேண்டும். இங்கு 15 ஆண்டுகளாக பா.ஜனதா தான் அதிகாரத்தில் உள்ளது. அவ்வாறு இருந்தும் எங்கள் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.இங்கு மாநில அரசு உள்நோக்கத்துடன் இட ஒதுக்கீட்டை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிகாரத்தை அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது. எங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும், வாக்காளர்கள் நல்ல ஆதரவை வழங்கியுள்ளனர். நாங்கள் மக்கள் சேவையை தொடர்ந்து சிறப்பான முறையில் மேற்கொள்வோம். எங்கள் கட்சியில் இருந்து விலகி போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மீண்டும் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஏமாற்றம் ஏற்படவில்லை
கலபுரகி, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி தேர்தல் முடிவு எங்களுக்கு திருப்தியை அளிக்கிறது. தரிகெரே மற்றும் பெலகாவியில் முதல் முறையாக காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டோம். அதனால் அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படவில்லை. இந்த மாநகராட்சி தேர்தல் முடிவுகள் ஆட்சிக்கு ஆதரவாக வந்துள்ளதா? எதிராக வந்துள்ளதா? என்பதை முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் தான் கூற வேண்டும். நாங்கள் டிக்கெட் வழங்குதில் சில தவறுகளை செய்துள்ளோம். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் உள்ளூரில் உள்ள நிர்வாகிகளின் பலம் தான் முக்கியம். சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வேறு பிரச்சினைகள் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம். எங்கள் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்தனர். எங்களிடம் பண பலம் இருக்கவில்லை. 3 மாநகராட்சிகள் தேர்தலில் பா.ஜனதாவினர் பண பலம் மற்றும் அதிகார பலத்தை தவறாக பயன்படுத்தி இந்த தேர்தலை சந்தித்தனர்.
கொரோனாவை நிர்வகிப்பதில் தோல்வி
பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதா முதல்-மந்திரிகளை மாற்றி வருகிறது. இப்போது குஜராத் முதல்-மந்திரியை மாற்றியுள்ளனர். இது, ஊழல், தவறான ஆட்சி நிர்வாகம், கொரோனாவை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது. கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதுகுறித்து உரிய ஆய்வு செய்ய வேண்டும். இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.