திஸ்பூர்,
வடகிழக்கு மாநிலமான அசாமில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி தாவல்கள் நடந்து வருகின்றன. மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபென் போரா. கடந்த 22-ந் தேதி பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
இந்நிலையில், காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர். கமலக்யா தே புரகயஸ்தா (கரிம்கஞ்ச் தொகுதி), சசிகாந்த தாஸ் (ராஹா தனி), வசந்த தாஸ் (மங்கல்டோய் தனி) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள், அசாம் மாநில பா.ஜனதா தலைவர் திலீப் சைக் கியா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.
முன்னதாக கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மூவரும் காங்கிரசால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த சூழலில் அவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் இணை செயலாளர் பர்ஷா பாப் கலிதா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் கங்கன் நாத் ஆகியோரும் பா.ஜனதாவில் இணைந்தனர்.
அவர்கள் கட்சியில் சேர்ந்ததை அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, “மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இது பாஜகவுக்கு ஒரு பெரிய நாள். இந்த இணைவு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ந்து வரும் புகழையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது என்று நான் நம்புகிறேன்" என்றார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமலாக்யா டே புர்காயஸ்தா, “நாட்டின் நலனுக்காகவும், அசாமின் பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.