தேசிய செய்திகள்

கட்டுமான நிறுவனம் நடத்தி ரூ.375 கோடி மோசடி: இந்தி நடிகை கைது

கட்டுமான நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.375 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை திஷா சவுத்ரி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மும்பை,

இந்தி பட நடிகை திஷா சவுத்ரி. இவர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான அனுராதா என்ற படம் வெற்றி பெற்றது. நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்து பொதுமக்களிடம் இருந்து ரூ.375 கோடி வரை வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் உறுதி அளித்தபடி வாடிக்கையாளர்களுக்கு வீடு கட்டி தரப்படவில்லை.

இதுதொடர்பாக 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மோசடி செய்ததாக 82 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு திஷா சவுத்ரி, அவரது கணவர் சச்சின் நாயக் மற்றும் இவர்களது கூட்டாளி அனுப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து திஷா சவுத்ரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவான அவர், தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றி வந்ததுடன், கோர்ட்டு விசாரணைக்கும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இதையடுத்து கோர்ட்டு அவரது ஜாமீனை ரத்து செய்தது. மேலும் 35 கைது வாரண்டு, 10 சம்மன் அனுப்பியது.

இருப்பினும் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு 2 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நடிகை மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை விரைந்து வந்த போலீசார் நடிகை திஷா சவுத்ரியை கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது