புதுடெல்லி,
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது 2014-ல் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாமல் இருந்தது. 39 இந்தியர்களின் உறவினர்களுக்கு அரசு நம்பிக்கையை கொடுத்து வந்தது. பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் அவர்களின் உறவினர்கள் பெரும் கவலையுடன் இருந்தனர், இருப்பினும் உயிருடன் இருக்கலாம் எனவும் நம்பினார்கள். இந்நிலையில் ஐ.எஸ். கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மொசூல் நகரில் இருந்து 39 இந்தியர்களும் பதூஷ் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு உள்ளனர். பதூஷ் நகரில் ஈராக் அதிகாரிகளுடன் சேர்ந்து நடைபெற்ற தேடுதலின் போது இந்தியர்களின் உடல்களும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. அங்கு அடையாள அட்டையும் காணப்பட்டது. உடல்களை மரபணு பரிசோதனை நடத்தியதில் 39 உடல்களில் 38 உடல்களின் மரபணு இந்தியர்களின் மரபணுவுடன் ஒத்துச்சென்றது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 39 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தகவலை தெரிவிப்பதில் அரசு காலம் கடத்தி உள்ளது, குடும்பத்தாருக்கு போலி நம்பிக்கையை அரசு கொடுத்து உள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் இரங்கல் தெரிவித்து உள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ஈராக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கள் நிதி உதவி மற்றும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.