ஹல்ட்வானி,
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்ட்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் சட்ட விரோதமாக மதராசா கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த கட்டிடத்தை நகராட்சி அதிகாரிகள் இடிக்க முடிவு செய்தனர். கட்டிடங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர். கட்டிடங்களை இடிப்பதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், நீதிமன்ற உத்தரவு என்று கூறி அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
இதனால் கோபம் அடைந்த அப்பகுதியில் உள்ள சிலர், அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தது.
இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250-பேர் காயம் அடைந்துள்ளனர். ஹல்ட்வானியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரகாண்டின் பதற்றமான பகுதிகளில் மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நைனிடால் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உத்தரகாண்ட் முதல் மந்தி புஷ்கர் சிங் தாமி, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு பேசிய முதல் மந்திரி, அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.