பாட்னா,
பீகாரில் ஜவதாரி கிராமத்தில் பர்ஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சோட்டு குமார். இவரது மனைவி மஞ்சு. இந்த நிலையில், மஞ்சுவின் சகோதரர் விகாஸ், கொல்கத்தா செல்வதற்காக ஜமுய் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
ரெயில் நிலையத்தில் மற்றொரு பெண்ணுடன் சோட்டு ஒன்றாக சென்றுள்ளார். இதனை கவனித்த விகாஸ் தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் சோட்டுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த சூழலில், காவல் நிலையத்திற்கு வந்த மஞ்சுவின் தாயார் கோபியா தேவி போலீசாரிடம் கூறும்போது, 2018-ம் ஆண்டு எனது மகள் மஞ்சுவுடன் சோட்டுக்கு திருமணம் நடந்தது. இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
ஒன்றரை வருடத்திற்கு முன் மருந்து வாங்கி வருகிறேன் என கூறி சென்றவர் திரும்பி வரவேயில்லை என கூறியுள்ளார்.
விகாஸ் கூறும்போது, எனது சகோதரி சோட்டு வருவார், வருவார் என நீண்டகாலம் காத்திருந்து வருகிறார். ஆனால், அந்த பெண்ணை போய் சோட்டு தனது மனைவி என கூறுகிறார் என வேதனை தெரிவித்துள்ளார்.
கோபியா தேவி போலீசாரிடம், சோட்டு எங்களை ஏமாற்றி விட்டார். ராஞ்சியை சேர்ந்த பெண்ணுடன் சோட்டுவுக்கு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 4 குழந்தைகள் வேறு உள்ளனர் என கூறி அதிர்ச்சி அடைய வைத்து உள்ளார்.
இதன்பின் சோட்டுவிடம் விசாரணை நடத்திய போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, மா சாரதா என்ற பெயரிலான இசைக்குழுவில் சோட்டு பாடகராக இருந்து வந்துள்ளார்.
ஆனால், சினாவரியா, சுந்தர்காண்ட், ராஞ்சி, சங்ராம்பூர், டெல்லி மற்றும் தியோகார் பகுதியில் தலா ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொருவருடனும், சோட்டுவுக்கு குழந்தை உள்ளது என கூறியுள்ளனர்.
தொடர்ந்து போலீசார், புகார் கூற வந்தவர்கள் 2-வது மனைவியின் குடும்பத்தினர் ஆவர். இதுவரை புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் கூறினால், விசாரணை நடத்துவோம் என கூறினர்.
கச்சேரி செய்ய செல்லும் இடத்தில் எல்லாம் சோட்டு பாட்டு, பாடி பெண்களை கவர்ந்து, அவர்களை திருமணம் செய்துள்ளார். ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, மற்றொரு பெண்ணை விட்டு விட்டு ஓடி விடுவது அவரது வழக்கம் என விகாஸ் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.