ஸ்ரீகாகுளம்,
ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொல்லா காஞ்சிலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் துவ்வா லோகநாத்தம் மற்றும் தோக்கரி தாலையா என இரண்டு பேர் தலைமையில் 2 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்களுக்குள் கிராம அரசியலில் யார் முன்னிலை வகிப்பது என்ற போட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனால் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த ஆண்டு கூட குழுக்கள் ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதலை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், பலசா துணை போலீஸ் சூப்பிரெண்டு கூறும்பொழுது, 2 குழுக்கள் இடையே மோதல் நடைபெற உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் நாங்கள் அதிரடி சோதனை நடத்தினோம்.
இதில், 42 நாட்டு வெடிகுண்டுகள், கற்கள் மற்றும் கம்புகள் ஆகியவை மோதலுக்காக தயாராக இருந்தன. அவற்றை கைப்பற்றி இரு குழுக்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் தப்பியோடி விட்டனர். வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் மோதலை தவிர்த்து உள்ளதுடன், போலீசாருக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.