பெங்களூரு,
வீடுகளுக்கு குழாய் மூலம் நீர் வினியோகம் செய்யும் ஜலஜீவன் மிஷன் திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 91.91 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 28 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் வழியாக நீர் கொடுக்கும் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2021-22-ம் ஆண்டில் 25.17 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இதுவரை 435 கிராம குடிநீர் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 69 திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 30 குடிநீர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 161 குடிநீர் திட்டங்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதிகள் ஒடும் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து இணைப்பு வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த திட்டம் பிரதமரின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடப்படும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.